கனவுகள் மெய்ப்பட வேண்டுமா?
-எஸ்.சதாசிவன்
மேற்படிப்புக்காக கல்லூரிக்குள் அடியெடுத்து
வைக்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் தன் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு கனவு இருக்கிறது.
அந்தக் கனவுகள் மெய்ப்படும் என்கிற நம்பிக்கையும் பெரும்பாலானவர்களிடம் உள்ளது.
இத்தகைய கனவுகள் மிகவும் அவசியமானவைதான். ஆயினும் ஒரு தெளிவான குறிக்கோளும், அதை
அடைவதற்கான செயல் திட்டங்களும் இருந்தால் மட்டுமே கனவுகள் எதிர்காலத்தில்
நிஜமாகும்.
கனவுகளை நோக்கி நம்மை இட்டுச்செல்லும்
வழிகாட்டிகள்தான் குறிக்கோள்கள்.
இக்குறிக்கோள் தெளிவாக, அளவிடக்கூடியதாக,
அடையக்கூடியதாக, யதார்த்தமானதாக, ஒரு கால வரையரைக்குட்பட்டதாக இருக்க வேண்டும்.
”நான் எதிர்காலத்தில் ஒரு நல்ல பதவியில் இருக்க
வேண்டும்”- என்பது ஒரு நல்ல கனவுதான்.
இந்தக் கனவை நனவாக்க “குறைந்தது 1000
பேருக்கு மேல் பணிபுரியும் ஒரு நிறுவனத்தில் நிதித்துறையில் சேர்ந்து அடுத்த 10
ஆண்டுகளில் அத்துறையில் மேலாளர் பதவிக்கு உயர்வேன்” என்கிற குறிக்கோள் அவசியம்.
கவனித்துப் பாருங்கள்; இக்குறிக்கோள் தெளிவாக,
அளவிடக்கூடியதாக, அடையக்கூடியதாக, யதார்த்தமானதாக, ஒரு கால வரையரைக்குட்பட்டதாக
இருக்கிறது.
குறிக்கோளோடு கூடவே, அதை அடைவதற்கான ஆயத்தங்களும்,
அதற்கான, செயல் திட்டங்களும் அவசியம்.
அந்த ஆயத்தங்களைச் செய்வதற்கு, செயல் திட்டங்கள் வரைவதற்கு கீழ்க்காணும்
கேள்விகள் வழிகாட்டலாம்:
- என் கனவை, குறிக்கோளை அடைவதற்குப் பொருத்தமான துறையைத்தான் நான் என் விருப்பப்பாடமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேனா?
- என் கனவு சார்ந்த துறையில் ஏற்கெனவே சிறந்து விளங்கும் மனிதர்களுடன் நான் எவ்வாறு பரிச்சயப்படுத்திக் கொள்ளலாம்?
- என் குறிக்கோளை நோக்கிப் பயணிக்க எனக்கு எம்மாதிரியான திறமைகள், குணாதிசயங்கள் தேவை? அவை என்னிடம் இருக்கின்றனவா? இல்லாதவை எவை? அவற்றை நான் எவ்வாறு பெறுவது? சிறிதளவே இருக்கும் விஷயங்கள் எவை? அவற்றை எவ்வாறு மேம்படுத்திக் கொள்வது?
- ஒவ்வொரு நாளும் என் கனவை / குறிக்கோளை எட்ட நான் செய்த செயல் என்ன?
தினமும் இரவு படுக்கைக்குச் செல்லுமுன்
மேற்குறிப்பிட்டுள்ள கேள்விகளுக்கு பதில்களை ஒரு நோட்டுப் புத்தகத்தில்
எழுதிவிட்டு பின்னர் தூங்கினால்; இதையே ஒரு பழக்கமாகச் செய்து வந்தால், அது
மனத்தெளிவையும், குறிக்கோளை அடையும் உத்வேகத்தையும், ஊக்கத்தையும் அளிக்கும்.
ஆயிரம் கிலோமீட்டர் தூரப்பயணம் முதல்
அடியிலிருந்துதான் ஆரம்பமாகிறது. அந்த முதல் அடியை இன்று எடுத்து வையுங்கள்.
உங்கள் கனவுகளுக்கும், உங்களுக்குமான தூரம் சில சென்டிமீட்டர்களாவது குறையும்.
கனவுகளை நோக்கி நீங்கள் நகர ஆரம்பம் செய்வீர்கள். கனவுகள் நெருங்கி, நெருங்கி ஒரு
நாள் நிச்சயம் மெய்ப்படும்.
www.ipdome.in
No comments:
Post a Comment